சென்னை மக்களின் நேரத்தை விழுங்கும் நகரமாக மாறிவிட்டது – வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை, 10 ஜூலை (ஹி.ச.) சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாநில வளர்ச்சி சென்னை மாநகரத்தை மட்டுமே மையமாகக் கொண்டு நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், வளர்ச்சியை அனைத்து மாவட்ட
Velmurugan


Un


சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாநில வளர்ச்சி சென்னை மாநகரத்தை மட்டுமே மையமாகக் கொண்டு நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், வளர்ச்சியை அனைத்து மாவட்டங்களுக்கும் சமச்சீராகப் பரவலாக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை இன்று வாழத் தகுதியான நகரமாக உள்ளதா அல்லது மக்களின் நேரத்தை விழுங்கும் நகரமாக மாறிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் தங்கள் குடும்பத்துடன் செலவிட வேண்டிய நேரத்தை போக்குவரத்து நெரிசலில் இழந்து வருகின்றனர்.

மாணவர்கள், தொழிலாளர்கள், அவசர சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள் என அனைவரும் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கான பலன் எதுவும் கிடைக்கவில்லை என்றும், கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் இன்னும் போக்குவரத்து குளறுபடிகள் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகரம் முழுவதும் மெட்ரோ ரயில், பாதாள சாக்கடை, சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மாற்றுப்பாதை திட்டமிடல் இல்லாமல் நடைபெறுவதால், மக்கள் தினந்தோறும் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சி சென்னை மாநகரத்தை மட்டுமே மையமாகக் கொண்டு நடைபெறக் கூடாது என்றும், புதிய தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பன்னாட்டு முதலீடுகள் ஆகியவை திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் பரவலாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ மற்றும் பிற உள்கட்டமைப்புப் பணிகளை மாற்றுப்பாதை வசதிகளுடன் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சமச்சீர் வளர்ச்சித் திட்டங்களை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ