Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் இனாம் நிலங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிப்பதாகக் கூறியுள்ள பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவில் சொத்துக்கள் எந்தச் சூழலிலும் தனிநபர்களின் பெயருக்கு மாற்றப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கரூர் மாவட்டத்தின் 15 கிராமங்களில் உள்ள சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான 3,084 ஏக்கர் 95 சென்ட் திருக்கோவில் இனாம் நிலங்களை, 3,390 நபர்களின் பெயரில் பதிவு மற்றும் விற்பனை செய்யும் வகையில் பதிவு தடையை நீக்குமாறு சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் இந்து கோவில் சொத்துகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பக்தர்கள் தானமாக வழங்கிய கோவில் சொத்துக்களை எந்தக் காரணத்திற்காகவும் வேறு யாருடைய பெயருக்கும் பட்டா மாற்றம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எந்த வகையிலும் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் பாதுகாப்பது இந்து சமய அறநிலையத் துறையின் சட்டப்பூர்வ கடமை என்றும், ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நிலங்களின் பதிவு தடையை எந்த அடிப்படையில் நீக்க உத்தரவிடப்பட்டது என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், எந்தக் காரணத்திற்காகவும் கோவில் நிலங்கள் தனிநபர்களின் கைக்கு செல்லக் கூடாது என்பதை முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜயும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தி.மு.க.வின் இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு செல்லக் கூடாது என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ