Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர்.
திருமாவளவன் பேசுகையில்,
தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக நல்லிணக்க உறவை பேணி வருவதாகவும், இந்தியா கூட்டணியில் தேசிய அளவிலும், தமிழகத்திலும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, விபத்து மற்றும் வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுடன் அரசு பணியும் வழங்குவது, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நல்ல அணுகுமுறை என்றார்.
கட்சி பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உதவ வேண்டும் என்பதே முக்கியமான பார்வை என்றும் வலியுறுத்தினார்.
கூட்டணி அரசியல் தொடர்பாக பேசிய அவர், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கிடையே எந்தவித முரண்பாடும் இல்லை என்றார். தேசிய அளவில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியே முக்கிய சக்தி என்பதால், காங்கிரஸ் எடுத்த நிலைப்பாட்டை மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரிப்பது இயல்பானது என்றும் கூறினார். இது திமுகவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்றும் விளக்கமளித்தார்.
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் பேசவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த திருமாவளவன், கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துகளையே முதலமைச்சரின் குரலாக எடுத்துக்கொள்ளலாம் என்றார். Talk less, work more என்ற அணுகுமுறையைத்தான் முதலமைச்சர் பின்பற்றுகிறார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எடுக்கும் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டபோது, திமுக நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட கட்சி என்பதால் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் என்றும், காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளதாக தமக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும், பாசிச அரசியலுக்கு எதிராக அச்சமின்றி குரல் கொடுக்கும் தலைவராக திருமாவளவன் இருப்பதாக பாராட்டிய அவர், இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam