இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றும் சமூகத்தை உருவாக்க வேண்டும் – அமைச்சர் அருண்ராஜ்
சென்னை, 11 ஜூலை (ஹி.ச) உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை செம்மொழிப் பூங்காவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்ற
Ar


சென்னை, 11 ஜூலை (ஹி.ச)

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை செம்மொழிப் பூங்காவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து டிஎம்எஸ் வளாகத்தில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கையும் அவர்கள் தொடங்கி வைத்தனர்.

கருத்தரங்கில் பேசிய அமைச்சர் அருண்ராஜ்,

மக்கள் தொகை ஒரு பாரம் அல்ல, மனித வளம் என்றும், அந்த மனித வளத்தை சரியான முறையில் பயன்படுத்துவதே முக்கியம் என்றும் தெரிவித்தார்.

சரியான வயதில் திருமணம், திட்டமிட்ட குழந்தைப் பேறு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவம் மற்றும் குழந்தைகளுக்கு இடையே 2 முதல் 3 ஆண்டுகள் இடைவெளி அவசியம் என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் தற்போது மகப்பேறு விகிதம் (Fertility Rate) 1.3 ஆக உள்ளதாகவும், மக்கள் தொகை சமநிலையாக இருக்க குறைந்தபட்சம் 2.1 ஆக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

பெண்கள் மீது குடும்பப் பொறுப்பை மட்டும் சுமத்தும் மனநிலை மாற வேண்டும்; ஆண்களும் குடும்பப் பொறுப்புகளை சமமாக பகிர்ந்துகொண்டால் பெண்களுக்கு குழந்தைப் பேறு குறித்த நம்பிக்கை அதிகரிக்கும் என்றார்.

இளைஞர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு போதைப்பொருள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது முதலமைச்சரின் இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து காரணமாக மாணவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்,

மனிதநேயத்துடன் செயல்படும் ஆட்சியே சிறந்த ஆட்சி என்றும், குடும்ப வாழ்க்கையில் ஆண்களும் குழந்தை வளர்ப்பில் சமமான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இளைஞர்கள் சமூக வலைதளங்களின் எதிர்மறை தாக்கம் மற்றும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி, நல்ல நண்பர்கள், புத்தக வாசிப்பு, விளையாட்டு மற்றும் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்,

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களின் நிகர்நிலை அந்தஸ்து தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து விரைவில் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

கண்ணகி நகர் உயிரிழப்பு சம்பவத்தில் மருத்துவர்களின் அலட்சியம் காரணமல்ல, மருத்துவ ரீதியான சிக்கலே காரணம் என்றும், அப்பகுதி மக்களுக்காக சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனை விரைவில் மேம்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ