அழகு முத்துக்கோன் குருபூஜை - நிபந்தனைகளுடன் இருசக்கர வாகனங்களுக்கு நீதிமன்றம் அனுமதி
தூத்துக்குடி, 11 ஜூலை (ஹி.ச) இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 269-ஆவது குருபூஜை மற்றும் பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 11) தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயரின
அழகு முத்துக்கோன் குருபூஜை -  நிபந்தனைகளுடன் இருசக்கர வாகனங்களுக்கு நீதிமன்றம் அனுமதி


தூத்துக்குடி, 11 ஜூலை (ஹி.ச)

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 269-ஆவது குருபூஜை மற்றும் பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 11) தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கும் வரி வசூலுக்கும் எதிராக முதன்முதலில் கிளர்ந்தெழுந்த இவரது வீரத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11 ஆம் நாள் தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சமுதாய அமைப்பினர் மற்றும் அரசியல் தலைவர்கள் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக, குருபூஜை விழாவுக்கு இருசக்கர வாகனங்களில் செல்ல காவல்துறை விதித்திருந்த தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், குருபூஜை விழாவில் பங்கேற்க இருசக்கர வாகனங்களில் செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாகசம் செய்யக்கூடாது என்றும், வாகனங்களை அதிவேகமாக இயக்கூடாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிபந்தனைகளை மீறி அதிவேகமாகவோ, ஆபத்தான முறையிலோ இருசக்கர வாகனங்களை இயக்கினால் காவல்துறையினர் உடனடியாக கைது செய்யலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

குருபூஜை விழாவின் போது பொது அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

குருபூஜையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் கட்டாலங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b