Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான எம்-சாண்ட் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், வெளி மாநிலங்களுக்கு எம்-சாண்ட் கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்தி, தேவைப்பட்டால் தடை விதிக்கும் அதிகாரத்தை கனிமவளத்துறை இயக்குனருக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக பெரும்பாலான கல்குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு நடைபெறும் அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் தமிழ்நாட்டையே முழுமையாக நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக ஜல்லி, எம்-சாண்ட் மற்றும் கட்டுமானக் கற்கள் போன்ற கனிமப் பொருட்கள் பெருமளவில் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. இதேபோல கர்நாடகாவுக்கும் குறிப்பிட்ட அளவில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த தொடர் ஏற்றுமதியால் தமிழ்நாட்டில் எம்-சாண்ட் தட்டுப்பாடு ஏற்பட்டு, உள்ளூர் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுவதோடு, விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மாநிலத்தின் தேவையை முதன்மைப்படுத்தும் வகையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய உத்தரவின்படி, வெளிமாநிலங்களுக்கு எம்-சாண்ட் கொண்டு செல்லப்படுவதை கண்காணித்து, மாநிலத்தில் இருப்பு குறையும் பட்சத்தில் உடனடியாக தடை விதிக்கும் முழு அதிகாரம் கனிமவளத்துறை இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் கட்டுமானத் திட்டங்களுக்கு தடையின்றி எம்-சாண்ட் கிடைப்பது உறுதி செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு கனிம வளங்கள் செல்வதை முறைப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும், மாநில நலனை பாதுகாப்பதே அரசின் முதல் கடமை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b