கற்பூரம் ஏற்றியபோது தீ விபத்து - இளம்பெண் பரிதாப பலி
சென்னை, 11 ஜூலை (ஹி.ச.) பூஜை அறையிலோ அல்லது கோவில்களிலோ கற்பூரம் ஏற்றி வழிபடும் போது, ஆடைகளில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி பெண்கள் உயிரிழக்கும் துயர சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன. சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஜனனி (19) என்ற இ
கற்பூரம் ஏற்றியபோது தீ விபத்து -  இளம்பெண் பரிதாப பலி


சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)

பூஜை அறையிலோ அல்லது கோவில்களிலோ கற்பூரம் ஏற்றி வழிபடும் போது, ஆடைகளில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி பெண்கள் உயிரிழக்கும் துயர சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன.

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஜனனி (19) என்ற இளம்பெண், கடந்த 3-ம் தேதி தனது வீட்டில் பூஜை செய்துகொண்டிருந்தபோது கற்பூரம் ஏற்றினார்.

அப்போது அவரது ஆடையில் தீப்பற்றியதால், உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த 8 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும், தீக்காயத்தின் தீவிரம் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை ஜனனி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 19 வயதே ஆன இளம்பெண்ணின் இந்த எதிர்பாராத மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தீபம், கற்பூரம் ஏற்றும்போது பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b