கஞ்சா விற்ற இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது – நாமக்கல் ஆட்சியர் அதிரடி உத்தரவு
நாமக்கல், 11 ஜூலை (ஹி.ச.) போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை எட்ட, தமிழ்நாடு அரசும் நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மிகக் கடுமையான ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிப் பகுதிகளில
கஞ்சா விற்ற இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது – நாமக்கல் ஆட்சியர் அதிரடி உத்தரவு


நாமக்கல், 11 ஜூலை (ஹி.ச.)

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை எட்ட, தமிழ்நாடு அரசும் நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மிகக் கடுமையான ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரிப் பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனையைக் தடுக்க போலீஸ் ரோந்து பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் (Anti-Drug Clubs) அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட எல்லையோரச் சோதனைச் சாவடிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் காவல்துறை மூலம் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகளின் சொத்துக்கள் முடக்கப்படும் அளவுக்குக் கடுமையான கைது நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

இதற்கிடையில் நாமக்கல் மாவட்டத்தில் 26 வயதான சுஜித் என்ற இளைஞர் மீது கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் மீது போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், பொது அமைதிக்கும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சுஜித்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மனுபாலன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிறையில் இருந்த சுஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மாவட்ட காவல்துறையின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b