Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க அளவில் சரிவை சந்தித்துள்ளது.
மாநிலம் முழுவதும் பருவமழை பொய்த்ததும், அதிகரித்து வரும் நீர் தேவையும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, மாவட்டங்களிலேயே அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 6.77 மீட்டர் வரை குறைந்துள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் 5.55 மீட்டரும், கரூர் மாவட்டத்தில் 5.42 மீட்டரும் நீர்மட்டம் சரிந்துள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 5.26 மீட்டரும், தொழில்நகரமான கோவையில் 4.81 மீட்டரும் நிலத்தடி நீர் குறைந்திருப்பது பதிவாகியுள்ளது.
ஈரோட்டில் 4.24 மீட்டர், திருவண்ணாமலையில் 3.15 மீட்டர், சேலத்தில் 3.07 மீட்டர், திருப்பூரில் 2.50 மீட்டர், திருச்சியில் 2.49 மீட்டர், கள்ளக்குறிச்சியில் 2.41 மீட்டர் நிலத்தடி நீர் சரிந்துள்ளது. இதேபோல் பிற மாவட்டங்களிலும் நீர் மட்டம் சற்று குறைந்திருக்கிறது.
மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் இந்த சரிவு மிகவும் கடுமையாக உள்ளதாக நீர்வளத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஆழ்துளை கிணறுகளை நம்பியிருப்பதும், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாததும் நிலைமையை மோசமாக்கியுள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால் வரும் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடும், பாசன நெருக்கடியும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, போர்க்கால அடிப்படையில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b