Enter your Email Address to subscribe to our newsletters

சவுத்தாம்டன், 11 ஜூலை (ஹி.ச.)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது, 3-வது மற்றும் 4-வது ஆட்டங்களில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி தொடர்ச்சியாக வெற்றி பெற்று, தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று (சனிக்கிழமை) சவுத்தாம்டனில் நடைபெறுகிறது.
தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களம் காண்கிறது.
மறுபுறம், ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது.
இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, முதல் மூன்று ஆட்டங்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு ரன் குவிக்காததால் ஏமாற்றம் அளித்தார்.
கடைசி ஆட்டத்திலாவது தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் வேட்டை நடத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.
அதேபோல், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து ஆறுதல் பெறுமா? என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி, சோனி ஸ்போர்ட்ஸ் 1, 3, 4 மற்றும் 5 ஆகிய தொலைக்காட்சி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA