காவிரி விவகாரத்தை இரு மாநிலங்களும் பேசி தீர்க்க வேண்டும் - தேவகவுடா வலியுறுத்தல்!
திருநள்ளாறு , 11 ஜூலை (ஹி.ச.) காவிரி நீர் பிரச்சினைக்கு நீதிமன்ற வழக்குகள் மூலம் நிரந்தரத் தீர்வு எட்ட முடியாது. தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா வலியு
A


திருநள்ளாறு , 11 ஜூலை (ஹி.ச.)

காவிரி நீர் பிரச்சினைக்கு நீதிமன்ற வழக்குகள் மூலம் நிரந்தரத் தீர்வு எட்ட முடியாது. தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா வலியுறுத்தினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு முன்னெடுத்து வருகிறது.

மாநில மக்களின் குடிநீர் மற்றும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 4.75 டி.எம்.சி. குடிநீர் வழங்குவதுடன், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனீஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் செய்ய முன்னாள் பிரதமர் தேவகவுடா வந்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் விஜய் மக்கள் விரும்பும் தலைவராக உள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் பேராதரவை அவர் பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு உள்ள தண்ணீர் பிரச்சினையை தமிழக தலைவர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்லும்.

அதன்மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்காது. எனவே, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான முறையில் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு தேவகவுடா கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA