குமாரமங்கலம் நீர்நிலை ஆக்கிரமிப்பு - 3 மாதத்தில் தார் சாலைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 11 ஜூலை (ஹி.ச.) மாத்தூரைச் சேர்ந்த காசிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தேவளி பெரியகுளம் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள நிலையில், சுமார் 15 ஏக்கர் நீர்நிலைப் பகுதி தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் மற்றும் தார் சாலைகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 11 ஜூலை (ஹி.ச.)

மாத்தூரைச் சேர்ந்த காசிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தேவளி பெரியகுளம் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள நிலையில், சுமார் 15 ஏக்கர் நீர்நிலைப் பகுதி தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் மற்றும் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், சட்டவிரோதமாக பட்டாக்கள் பெற்று வீட்டுமனை திட்டங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தப்பட்டு, நிலங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் நீர்நிலையின் இயல்பு பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால், சட்டவிரோத பட்டாக்களை ரத்து செய்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு, நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான சிறப்பு அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தார் சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் நீர்நிலைகளே என்றும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், அதன் பின்னர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இதேபோன்ற பல வழக்குகளிலும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களை குறிப்பிட்ட நீதிபதிகள்,

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் வந்தால் உரிய அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முன்வருவதாக தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

முன்பு நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும் ஆக்கிரமிப்புகள் நீடித்தன. தற்போது அரசே தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பது உண்மையான மாற்றம்.

இந்த நல்ல மாற்றம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பாராட்டு தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam