லால்குடி அருகே பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்
திருச்சி, 11 ஜூலை (ஹி.ச.) திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி (32) என்பவர் கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரவு ஆட்டுப்பட்டிக்குச் சென்றபோது மாயமானார். மறுநாள் அப்பகுதியில் உள்ள பெரிய ஏரியின் நடுவே மணல் திட்ட
போராட்டம்


திருச்சி, 11 ஜூலை (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி (32) என்பவர் கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரவு ஆட்டுப்பட்டிக்குச் சென்றபோது மாயமானார்.

மறுநாள் அப்பகுதியில் உள்ள பெரிய ஏரியின் நடுவே மணல் திட்டில், கை, கால்கள் கட்டப்பட்டு ஆடைகளின்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதையடுத்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் நெடுங்கூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Hindusthan Samachar / GOKILA arumugam