Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 11 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டத்தில் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் பட்டாசு ஆலைககள் என மொத்தம் 1,000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
ஆலைகளில் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்துவது, பயிற்சி இல்லாத நபர்களை பணிக்கு அமர்த்துவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் வெடி பொருள்களை கையாள்வது, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பட்டாசு தயாரிப்பது, தடை செய்யப்பட்ட பேரியம் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்துவது, பட்டாசு ஆலையை சட்ட விரோதமாக உள் குத்தகைக்கு விடுவது, குடோன்களில் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை இருப்பு வைப்பது, வீடுகள், காட்டுப் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முழுவதும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்க அதிகாரிகள் குழு தீவிர ஆய்வு மேற்கொண்டது.
மொத்தம் 206 பட்டாசு ஆலைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், பல்வேறு ஆலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வின் முடிவில், கடுமையான விதிமீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 12 ஆலைகளின் உரிமங்கள் உடனடியாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
மேலும், பாதுகாப்பு குறைபாடுகள் காணப்பட்ட 82 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நோட்டீஸ் பெற்ற ஆலைகள் உரிய விளக்கம் அளித்து, குறைபாடுகளை சரிசெய்ய தவறினால், அவற்றின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டாசு உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக விளங்கும் விருதுநகரில், அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் இந்த சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மை நோக்கம் எனவும், விதிமுறைகளை மீறும் ஆலைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை பாயும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b