Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 11 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு மிக முக்கியமான அணையான மேட்டூர் அணை தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணை ஆகும்.
தமிழகத்தின் மிக முக்கிய வாழ்வாதாரமாகப் போற்றப்படும் இந்த அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில், தற்போது நீர்மட்டம் 75 - 76 அடி என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால், அணையின் நீர்மட்டம் சரிவை சந்தித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
வினாடிக்கு 125 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 91 கன அடியாக வெகுவாக குறைந்துள்ளது.
நீர்வரத்து சரிவின் காரணமாக அணையின் நீர்மட்டமும் 75.98 அடியில் இருந்து 75.83 அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் மொத்த நீர் இருப்பு 37.93 டி.எம்.சி.யாக உள்ளது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b