Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பிற மதங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, இந்து மதத்தை வேண்டுமென்றே புறக்கணித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபோன்ற அணுகுமுறை மதநல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் பாகுபாடு காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள நயினார் நாகேந்திரன், அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவிக்காதவர்கள், தற்போது கரூருக்கு வந்து மத அரசியலை முன்னெடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் ஆன்மிக பாரம்பரியம் மிக்க மாநிலம் என்றும், தமிழ் இலக்கியங்களும் புராணங்களும் இந்து சமய மரபுகளைப் போற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு வங்கி அரசியலுக்காக இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதாக அமைச்சர் ராஜ்மோகனையும் அவரது தலைமையையும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P