Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் மெட்ரோ ரயில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை, மேம்பாலப் பணிகள் காரணமாக பல இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
எல் நினோ தாக்கத்தால் வெப்பம் அதிகரித்து வரும் சூழலில், கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் மேற்கூரையில்லாத தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் அவதிப்படுவதாக அவர் கூறினார்.
சில இடங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மயக்கம் அடையும் சம்பவங்களும் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் பாதுகாப்பு மேற்கூரை, போதிய தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட பல நிரந்தர பேருந்து நிறுத்தங்களும் தற்போது சேதமடைந்து, பராமரிப்பின்றி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான இராமாபுரம், மணப்பாக்கம், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், சின்னமலை, போரூர், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் வடசென்னையின் பல பகுதிகளில் போதிய பேருந்து நிறுத்த வசதிகள் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் இருந்த இடங்களில் தற்காலிக பாதுகாப்பு மேற்கூரைகள் அமைத்தல், தெருவிளக்குகளை பராமரித்தல், குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ