நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூரில் SFI ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
திருப்பூர், 11 ஜூலை (ஹி.ச.) மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் முறைகேடுகள், குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் திருப்பூ
போராட்டம்


திருப்பூர், 11 ஜூலை (ஹி.ச.)

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் முறைகேடுகள், குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் திருப்பூரில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில், ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தேர்வு நடைமுறைகளில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும், மேலும் 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் நடைமுறையில் இருந்ததைப் போல பிளஸ்-2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் பேசிய இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள், கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வரலாறு காணாத அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாகவும், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வினாத்தாள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், நீட் தேர்வைச் சுற்றியுள்ள குழப்பங்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக நடப்பு ஆண்டில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர்கள் விமர்சித்தனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்யப்படும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam