Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)
கணவரை இழந்த நிலையில் ஆவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அந்த பெண் காவலரிடம், ரவுடி அப்பு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
தனிமையில் இருந்த அவரிடம் அன்பாகப் பேசி, திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை கொடுப்பதாக நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். இதனை நம்பிய பெண் காவலர், தவனை முறையில் தன்னிடம் இருந்த 97 சவரன் தங்க நகைகளையும், ரூ.42 லட்சம் ரொக்கப் பணத்தையும் அப்புவிடம் கொடுத்துள்ளார்.
இத்துடன் நில்லாமல், பெண் காவலரின் பெயரில் இருந்த கார், இருசக்கர வாகனம் மற்றும் வைர ஆபரணங்களையும் அப்பு வாங்கி ஏமாற்றியுள்ளார். நாட்கள் செல்லச் செல்ல திருமணம் குறித்து கேட்டபோது, அப்பு மழுப்பலான பதில்களைக் கூறி தட்டிக்கழித்து வந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் காவலர், இது தொடர்பாக சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ரவுடி அப்பு என்ற சிவராமனை தேடி வந்தனர்.
இந்நிலையில், தனிப்படை போலீசார் அவரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அப்பு மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண் காவலரிடமே மறுமண ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி செய்யப்பட்ட நகை, பணம் மற்றும் வாகனங்களை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b