Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச)
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவின்பேரில், பழனி அடிவாரத்தில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் சொத்து தனிநபர்களின் பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அந்தப் பத்திரப்பதிவை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சட்டவிரோத பத்திரப்பதிவை ரத்து செய்யவும், அதனை மேற்கொண்ட அலுவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பத்திரப்பதிவுத்துறை தலைவர், மதுரை மண்டல பதிவுத்துறை துணைத்தலைவர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு அனைத்து ஆவணங்களுடன் விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், தகுதியற்ற ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், கிரையம் எழுதிக்கொடுத்தவர் மற்றும் சொத்தை வாங்கியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ