பல மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததாக வழக்கு - நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீன்
பெங்களூரு, 11 ஜூலை (ஹி.ச.) பல மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரான நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ரூ.4,000 ரொக்க உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. கர்நாடகா
பிரகாஷ் ராஜ்


பெங்களூரு, 11 ஜூலை (ஹி.ச.)

பல மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரான நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ரூ.4,000 ரொக்க உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.

கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பிரகாஷ் ராஜ் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டி, கே. திலீப் குமார் என்பவர் தனிப்பட்ட புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் இரண்டு முறை சம்மன் அனுப்பியபோதும் பிரகாஷ் ராஜ் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீன் மறுக்கப்பட்ட பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தனது வழக்கறிஞருடன் பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.

அப்போது அவரது தரப்பு வழக்கறிஞர், நீதிமன்ற சம்மன் தங்களுக்கு முறையாக கிடைக்கவில்லை என்றும், ஊடகங்கள் மூலமாகவே தகவல் அறிந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை ஏற்கனவே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ரூ.4,000 ரொக்க உத்தரவாதம் செலுத்தும் நிபந்தனையுடன் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீன் வழங்கியது.

இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு குடிமகன் ஒரே ஒரு வாக்காளர் அடையாள அட்டையை மட்டுமே வைத்திருக்க முடியும்.

இந்த விதியை மீறி ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை பிரகாஷ் ராஜ் வைத்திருந்ததாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P