Enter your Email Address to subscribe to our newsletters

கீவ், 11 ஜூலை (ஹி.ச)
உக்ரைன் தலைநகர் கீவ், இன்று அதிகாலையில் ரஷ்யாவின் கடுமையான ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்ய படைகள் கீவ் நகரை நோக்கி ஏவியதாக தகவல்கள் கூறுகின்றன.
வான் தாக்குதல் எச்சரிக்கை அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இந்த தாக்குதலில் குடியிருப்பு அல்லாத ஒரு கட்டடம் கடுமையாக சேதமடைந்தது.
மற்றொரு மாவட்டத்தில் இருந்து புகை மண்டலம் எழுவதைக் காண முடிந்தது. மேலும், அலுவலக கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகம் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
வார இறுதி நாளின் அதிகாலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், சமீப காலங்களில் கீவ் மீது நடத்தப்பட்ட மிகத் தீவிரமான ஏவுகணை வீச்சுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான இடங்களில் மீட்புப் பணிகளும், சேத மதிப்பீடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுவரை உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
Hindusthan Samachar / vidya.b