தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு- தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல்
தமிழ்நாடு, 11 ஜூலை (ஹி.ச.) தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான 100 கூடுதல் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் அத
மருத்துவர்கள்


தமிழ்நாடு, 11 ஜூலை (ஹி.ச.)

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான 100 கூடுதல் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை தலா 100 எம்பிபிஎஸ் இடங்கள் கொண்டிருந்த நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில், இனி தலா 150 மாணவர்கள் சேர்க்கை பெற முடியும்.

இந்த 100 கூடுதல் இடங்களின் மூலம், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5,150 ஆக உயர்கிறது. இந்த புதிய இடங்களுக்கான மாணவர் சேர்க்கை 2026–27 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது 100 புதிய இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

மேலும், நாமக்கல் மற்றும் திருப்பூரைத் தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியை மாநில மருத்துவத் துறை எதிர்பார்த்து வருகிறது.

இந்த இட அதிகரிப்பு, மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, குறிப்பாக ஏழை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை உருவாக்கியுள்ளதால், கல்வித்துறையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam