Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 11 ஜூலை (ஹி.ச.)
தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் வீசப்படுவதால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவனுபாண்டியன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் G. R. சுவாமிநாதன் மற்றும் P. புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, தாமிரபரணி ஆற்றங்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி, இறந்தவர்களுக்கான ஈமச்சடங்குகளை மேற்கொள்வதாகவும், அப்போது பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஆடைகள், துணிகள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்களை ஆற்றில் வீசுவது தொடர்வதாகவும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், தினமும் ஒரு டன் அளவுக்கு ஆடைகள் மற்றும் துணிகள் தாமிரபரணி ஆற்றில் கொட்டப்படுவதாகக் குறிப்பிடப்பட்டதோடு, அவற்றை அகற்றி ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் திருமூர்த்தியை நீதிமன்றத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டினர்.
உத்தரவில், மதத்தின் பெயரால் கூட எந்த நீர்நிலையையும் மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. தாமிரபரணி கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. எனவே, இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் ஆற்றில் மேலும் மாசுபாடு ஏற்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆற்றில் வீசப்படும் பாலியஸ்டர் உள்ளிட்ட துணிகள் மக்காத தன்மை கொண்டவை என்பதால் சுற்றுச்சூழலுக்கும், பொது சுகாதாரத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இந்தியக் கரு ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அதேசமயம், இது கோடிக்கணக்கான இந்துக்களின் மத நம்பிக்கைகளுடன் தொடர்புடைய விவகாரம் என்பதால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் எனக் கூறிய நீதிமன்றம், ஆற்றங்கரைக்கு அருகில் கட்டப்பட்டு வரும் குளத்தை சடங்குகளுக்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட நிரந்தரத் தீர்வுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் பரிந்துரைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதுதொடர்பாக 16 ஜூலை 2026 அன்று பிறப்பிக்கப்பட உள்ள உத்தரவுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு, எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P