Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா, 11 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சஹாபாத் மண்டலத்திலுள்ள தெய்வாலகுடா கிராமத்தில், போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படும் ஒருவர், சிறுமி உள்ளிட்ட 6 பேரை கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் தெரிவித்த தகவலின்படி, ராஜ்குமார் (28) என்பவர், தனது அண்டை வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடந்த மே மாதம் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, சிறுமியின் தாய் லட்சுமி அளித்த புகாரின் பேரில், ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் சுமார் இரண்டு மாதங்கள் சிறையில் இருந்து, ரூ.20 ஆயிரம் ரொக்க ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை ராஜ்குமார் கத்தியுடன் சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து, சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் லட்சுமி, பாட்டி ருக்கம்மா, ராஜ்குமாரின் மனைவி சரிதா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளான பரிக்ஷித் (3), தெய்விக்ஷித் (2) ஆகியோரும் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை சம்பவத்துக்குப் பிறகு, தனது பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆறு பேரை கொலை செய்துவிட்டேன். நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு ராஜ்குமார் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெற்றோர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தெலங்கானா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட விதம் குறித்தும் சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடையிலும் விவாதம் எழுந்துள்ளது.
போலீசார் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P