ஆழ்கடலில் மூழ்கிய காசிமேடு விசைப்படகு- பதைபதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
சென்னை, 11 ஜூலை (ஹி.ச.) சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த டெல்லி பிரசாத்துக்கு சொந்தமான ''செண்பக ரூபிணி'' என்ற கில்நெட் விசைப்படகு ஆழ்கடலில் மூழ்கிய சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூல
விசைப்படகு


சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)

சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த டெல்லி பிரசாத்துக்கு சொந்தமான 'செண்பக ரூபிணி' என்ற கில்நெட் விசைப்படகு ஆழ்கடலில் மூழ்கிய சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜூலை 4ஆம் தேதி இரவு, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 8 மீனவர்களுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க இந்த விசைப்படகு புறப்பட்டது.

ஜூலை 8ஆம் தேதி மாலை, ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து சுமார் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் உள்ளே திடீரென பலத்த சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து இயந்திரத்தை நிறுத்தி ஆய்வு செய்த மீனவர்கள், படகுக்குள் வேகமாக கடல்நீர் புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக படகு உரிமையாளருக்கும், அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பிற மீனவர்களுக்கும் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்து உதவி கோரினர்.

சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள், சேதமடைந்த படகை கயிறு கட்டி கரையை நோக்கி இழுத்துச் சென்றன. ஆனால், கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து சுமார் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, 'செண்பக ரூபிணி' விசைப்படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது.

இந்த சம்பவம் குறித்து படகு உரிமையாளர் டெல்லி பிரசாத், சென்னை காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மீன்வளத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், விசைப்படகு கடலில் மூழ்கும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam