Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச)
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு தமிழக அரசு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கியிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், 1998 பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 58 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், அவர்கள் எந்தத் தவறும் செய்யாத சாதாரண மக்கள் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதலை முன்கூட்டியே தடுக்கத் தவறியதால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்றளவும் வாழ்வாதாரத்திற்காக போராடி வருவதாகக் கூறிய அவர், அரசு அனைவருக்கும் பொதுவானது என்பதால், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதைப் போலவே, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ