என்னை வெற்றி பெற வைத்த நிர்வாகிகளையே நீக்கிவிட்டனர் – அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்த சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ்
கள்ளக்குறிச்சி, 12 ஜூலை (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், சி.வி. சண்முகத்தின் ஆதரவாளருமான ராகேஷ், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற ஒன்ற
எம்எல்ஏ ராகேஷ்


கள்ளக்குறிச்சி, 12 ஜூலை (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், சி.வி. சண்முகத்தின் ஆதரவாளருமான ராகேஷ்,

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தார்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உழைத்த நிர்வாகிகளுக்குப் பரிசாக அவர்களின் பதவிகளையே பறித்திருப்பது வேதனையளிப்பதாகவும், தோல்வியடைந்த தொகுதிகளை விட்டுவிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் பணியாற்றிய நிர்வாகிகளை நீக்கியிருப்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

தன்னை வேட்பாளராக அறிவித்தபோது தனிப்பட்ட துயரத்தை கூட பொருட்படுத்தாமல் கட்சிக்காக உழைத்த கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரின் பதவியும் பறிக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

திமுகவுடன் இணைவது தற்கொலை முயற்சிக்கு சமம் என்பதால்தான் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், மாவட்ட செயலாளர்களின் சுயநலத்திற்காக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், தவறான முடிவுகளால் அதிமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதாகவும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்களை அழைத்து கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இரட்டை இலை சின்னத்தில் தன்னை வெற்றி பெறச் செய்த ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகளை நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், அவர்களை நீக்கியிருந்தால் தன்னையும் சின்னசேலம் பேரூர் கழகச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிக்கொள்ளலாம் என்றும் ராகேஷ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam