காரைக்குடியில் பிறந்த 45 நாள் பெண் குழந்தை கடத்தல் - 3 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!
சிவகங்கை, 12 ஜூலை (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நா.புதூர் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் – லட்சுமி தம்பதியருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ஆம் தேதி நான்காவது பெண் குழந்தை பிறந்தது. குடும்பப் பிரச்சினையால் கணவன்-மனைவ
குழந்தை கடத்தல்


சிவகங்கை, 12 ஜூலை (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நா.புதூர் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் – லட்சுமி தம்பதியருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ஆம் தேதி நான்காவது பெண் குழந்தை பிறந்தது. குடும்பப் பிரச்சினையால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

மருத்துவமனையில் இருந்தபோது, அங்கு வந்திருந்த 55 வயது பெண் ஒருவர், குழந்தையை வேறு குடும்பத்திடம் கொடுக்குமாறு லட்சுமியை தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

லட்சுமி மறுத்த நிலையிலும், அவரது வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பெற்றுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை லட்சுமியின் வீட்டிற்கு காரில் வந்த 3 பெண்கள், அவரையும் அவரது மூத்த மகளையும் மிரட்டி, ₹3 லட்சம் பணத்தை கையில் திணித்துவிட்டு, தொட்டிலில் இருந்த 45 நாள் பெண் குழந்தையைத் தூக்கிச் சென்று தப்பியுள்ளனர்.

இதையடுத்து, இன்று காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆசிஷ் புனியாவிடம் லட்சுமி புகார் அளித்தார்.

எனக்கு குழந்தைதான் வேண்டும் ,அவர்கள் கொடுத்த ₹3 லட்சம் பணம் வேண்டாம் என்று கூறி, அந்தப் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை மீட்கவும், கடத்திச் சென்ற 3 பெண்களையும் கைது செய்யவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம்,காரைக்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam