Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 12 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
அவ்வப்போது இவ்விலங்குகள் மலையடிவார பகுதிகளான கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன.
குறிப்பாக கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி நடமாடி வந்ததுடன், மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதனால் விக்கிரமசிங்கபுரம், ஆலடியூர் உள்ளிட்ட பகுதிகளில் கரடிகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் பல்வேறு இடங்களில் கூண்டுகள் அமைத்தனர். அதன் தொடர்ச்சியாக, விக்கிரமசிங்கபுரம் அருகே சங்கரபாண்டியபுரம் பகுதியில் அண்மையில் இரண்டு கரடிகள் வெவ்வேறு நாட்களில் கூண்டில் சிக்கின.
இந்நிலையில், மணிமுத்தாறு அருகே ஆலடியூர் அடுத்த கோரையார்குளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் இன்று அதிகாலை சுமார் 3 வயதுடைய கரடி ஒன்று சிக்கியது.
தகவலறிந்து வந்த களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் மேற்பார்வையில், வன கால்நடை மருத்துவர்கள் கரடிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் பாபநாசம் வனச்சரக பணியாளர்களின் உதவியுடன் கரடி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட கொடமாடி அடர்வனப் பகுதியில் அதன் இயற்கை வாழ்விடத்தில் விடுவிக்கப்பட்டது.
ஒரே வாரத்தில் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 கரடிகள் பிடிபட்டு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam