பின்னணிப் பாடகி எஸ். ஜானகி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் – ஓ. பன்னீர்செல்வம்
சென்னை, 12 ஜூலை (ஹி.ச.) இந்தியத் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் துயரத்தையும் அளித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தி
Ops


சென்னை, 12 ஜூலை (ஹி.ச.)

இந்தியத் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் துயரத்தையும் அளித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,

1957-ஆம் ஆண்டு விதியின் விளையாட்டு திரைப்படத்தின் மூலம் இசைப் பயணத்தைத் தொடங்கிய எஸ். ஜானகி, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இசை உலகில் தனக்கென அழியாத முத்திரையைப் பதித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பதினேழு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

குறிப்பாக, கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் இடம்பெற்ற சிங்கார வேலனே தேவா பாடல் தமிழக மக்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் என்றும், மழலைக் குரல் முதல் மூதாட்டியின் குரல் வரை பல்வேறு குரல் வடிவங்களில் உணர்ச்சிபூர்வமாகப் பாடும் அபூர்வ திறமை கொண்டவர் எஸ். ஜானகி என்றும் தெரிவித்துள்ளார்.

எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கும், திரைப்படத் துறைக்கும், குறிப்பாக தமிழக மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக ஓ. பன்னீர்செல்வம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ