டிஜிட்டல் இந்தியா வெறும் புளுகு மூட்டை - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
சென்னை , 12 ஜூலை (ஹி.ச.) ‘டிஜிட்டல் இந்தியா’ வெறும் புளுகு மூட்டையாகிவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- மத்திய பா.ஜ.க. அரசின் மவுனம்
A


சென்னை , 12 ஜூலை (ஹி.ச.)

‘டிஜிட்டல் இந்தியா’ வெறும் புளுகு மூட்டையாகிவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசின் மவுனம் எதைக் காட்டுகிறது? ‘டிஜிட்டல் இந்தியா’ என மேடைக்கு மேடை முழங்கும் மத்திய அரசு, அதன் நிழலில் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள தேர்வு மோசடி மாபியா உருவாகி இருப்பதை தடுக்க தவறியுள்ளது.

கல்வி முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு பதிலாக, தேர்வு மோசடித் தொழிற்சாலையையே டிஜிட்டல் மயமாக்கி மிகப்பெரிய அளவில் வளர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டுக்கு பிறகு தேர்வு முறைகேடுகளில் கேள்வித்தாள் கசிவு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், தேர்வுகள் ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்புகளால் நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தேர்வு முறைகேடுகளால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது வெறும் வினாத்தாள் கசிவு பிரச்சினை அல்ல; இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் செயல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கேள்வித்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் நிலைக்கு கல்வித்துறை தள்ளப்பட்டுள்ளதாகவும், ‘குஜராத் மாடல்’, ‘டபுள் என்ஜின்’ என கூறப்படும் குஜராத்தில் கூட தேர்வு முறைகேடு வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தேர்வு மோசடிகள் மற்றும் கோச்சிங் நிறுவனங்கள் சார்ந்த முறைகேடுகளால் சிலர் மட்டுமே பயனடைகின்றனர் என்றும், மாணவர்களுக்கு ஏமாற்றமும் பாதிப்புகளுமே மிஞ்சுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA