வந்தே மாதரத்தை கட்டாயமாக்குவது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் - வன்னி அரசு
விருதுநகர், 12 ஜூலை (ஹி.ச.) சாத்தூரில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜக முன்னெடுக்கும் மதவாத மற்றும் வெறுப்பு அரசியல் எடுபடாது என்பது அக்கட்
வன்னியரசு


விருதுநகர், 12 ஜூலை (ஹி.ச.)

சாத்தூரில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பாஜக முன்னெடுக்கும் மதவாத மற்றும் வெறுப்பு அரசியல் எடுபடாது என்பது அக்கட்சிக்கே தெரியும் என்றும், அதனால் தனது கொள்கைகளை திணிப்பதற்காக 'வீ தி லீடர்' (We The Leader) போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அண்ணாமலை எத்தனை மாறுவேடத்தில் வந்தாலும், அவர் பாஜகவின் பினாமி அமைப்பின் ஒரு கருவி என்பதைக் மறைக்க முடியாது என்றும், காவல்துறை பணியில் இருந்து விலகியபோது தனக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக கூறியதை மக்கள் மறக்கக் கூடாது என்றும் விமர்சித்தார்.

அதிமுக குறித்து பேசிய அவர், தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்த பெரிய இயக்கமான அதிமுகவில் இருந்து தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் விலகுவது ஏன் என்பதை அக்கட்சித் தலைமையே சிந்திக்க வேண்டும் என்றார். டி.டி.வி. தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்றும், பாஜகவுடன் இணையும் அரசியல் தமிழ்நாட்டுக்கு ஏற்றதல்ல என்றும் கூறினார்.

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் அரசியல் கட்சியினர் ஆய்வு செய்வது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது அரசு அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமே என்றும், எந்த அரசியல் கட்சியினரும் நேரடியாக ஆய்வு செய்யக் கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலை முழுமையாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை மாநிலங்களில் அமல்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர், அதன் ஒரு பகுதியாகவே 'வந்தே மாதரம்' பாடலை கட்டாயமாக்க முயற்சி நடைபெறுவதாக கூறினார்.

நாட்டிற்கு ஏற்கனவே தேசிய கீதம் உள்ள நிலையில், வந்தே மாதரத்தை கட்டாயமாக்குவது தவறான முன்னுதாரணம் என்றும், அது தேசிய கீதத்தின் முக்கியத்துவத்தை அவமதிக்கும் செயலாக பார்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். மேலும், 'வந்தே மாதரம்' பாடல் இடம்பெற்றுள்ள ஆனந்த மடம் நாவல் குறித்து தனது கருத்துகளையும் அவர் பதிவு செய்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P