சென்னை வெளிவட்டச் சாலை தனியார் ஒப்பந்த முயற்சியை திரும்பப் பெற வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை, 12 ஜூலை (ஹி.ச) சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை அமைந்துள்ள வெளிவட்டச் சாலை தமிழ்நாட்டின் முக்கிய பொதுச் சொத்து என்றும், அதை நீண்டகால வருமான உரிமையுடன் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக வாழ
Velmurugan


சென்னை, 12 ஜூலை (ஹி.ச)

சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை அமைந்துள்ள வெளிவட்டச் சாலை தமிழ்நாட்டின் முக்கிய பொதுச் சொத்து என்றும், அதை நீண்டகால வருமான உரிமையுடன் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பை தனியார் நிறுவனங்கள் நீண்டகாலம் இலாபம் ஈட்டும் வகையில் ஒப்படைப்பது மக்கள் நல ஆட்சிக்கு பொருந்தாதது எனக் கூறியுள்ளார்.

வெளிவட்டச் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிப்பதோடு, தொழில் வளர்ச்சி மற்றும் நகர விரிவாக்கத்தால் எதிர்காலத்தில் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் நிலையில், அதன் நீண்டகால வருவாய் வாய்ப்பை அரசு கைவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சொத்தின் உண்மையான பொருளாதார மதிப்பு, வருங்கால வருவாய் கணக்கீடு, அரசே ஏன் பராமரிக்க முடியாது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தமிழக அரசு வெளிப்படையாக மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகள் தனியார் நிறுவனங்களின் நீண்டகால இலாபத்திற்கான கருவிகளாக மாறக் கூடாது என்றும், பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதும் மக்களின் பொருளாதார உரிமைகளை நிலைநிறுத்துவதும் அரசின் அடிப்படைப் பொறுப்பு என்றும் தி.வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ