Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 ஜூலை (ஹி.ச.)
வியட்நாமில் சுற்றுலா பயணத்தின் போது நிகழ்ந்த படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகபிரபு (44) உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
வியட்நாமுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் Lava International நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதா, வானிலை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டனவா, உயிர்காக்கும் உபகரணங்கள் மற்றும் அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனரா, மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விசாரணையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதோ அல்லது அலட்சியம் நடந்ததோ உறுதியானால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் பொறுப்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த முருகபிரபு உள்ளிட்ட 10 பேரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் அனைத்து அரசு உதவிகளும் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பத்து தமிழர்களின் உயிரிழப்பு வெறும் விபத்து என்ற பெயரில் மறைக்கப்படக் கூடாது என்றும், உண்மையை வெளிக்கொண்டு வந்து பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழுமையான நீதி கிடைப்பதை தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ