Enter your Email Address to subscribe to our newsletters

ராம்பன், 13 ஜூலை (ஹி.ச.)
ஜம்மூ காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சந்தர்கோட் லங்கர் பாயிண்ட் அருகே, ஜம்மு காஷ்மீர் சாலை போக்குவரத்துக் கழகத்தின் (JKRTC) இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு கார் மோதிய விபத்தில் குறைந்தது 18 அமர்நாத் யாத்ரீகர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் இன்று உறுதி செய்தனர்.
விபத்து நடந்தவுடன் சிவில் நிர்வாகம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையை உடனடியாக தொடங்கின. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து CRPF துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (DIG) மணீஷ் குமார் சாச்சார் கூறுகையில்,
இன்று காலை 7.21 மணிக்கு, வாகன அணியில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளாகின. கிட்டத்தட்ட 18 பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களை ராம்பன் மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். அனைவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மற்றொரு வாகன அணிக்கு மாற்றப்படுகின்றனர்.
என்று கூறினார்.
ராம்பன் மாவட்ட துணை ஆணையர் முகமது அல்யாஸ் கான் விபத்து குறித்து விளக்குகையில், யாத்ரீகர் வாகன அணி சந்தர்கோட் லங்கர் பாயிண்ட்டை அடைந்தபோது விபத்து நிகழ்ந்ததாக கூறினார்.
காலை சுமார் 7.20 மணியளவில், பஹல்காம் யாத்ரா வாகன அணி சந்தர்கோட் லங்கர் பாயிண்ட்டை அடைந்தபோது, இரண்டு SRTC பேருந்துகள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு காரும் சேதமடைந்தது. 18 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
ராம்பன் தலைமை மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் கமல் ஜீ ஜடூ கூறுகையில்,
சில வாகனங்கள் மோதியதில் மொத்தம் 18 பேர் காயமடைந்தனர். முகாமில் நிலைநிறுத்தப்பட்டிருந்த எங்கள் மருத்துவக் குழு, சம்பவ இடத்திலேயே சிகிச்சை மற்றும் முதலுதவி அளித்தது.
பின்னர் அவர்களை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மாவட்ட மருத்துவமனையில் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், அனைவரும் நிலையான உடல்நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. அனைத்து யாத்ரீகர்களையும் நாங்கள் டிஸ்சார்ஜ் செய்துள்ளோம் என்றார்.
நடைபெற்று வரும் ஸ்ரீ அமர்நாத் ஜி யாத்திரைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர ஆதிக்கப் பயிற்சிகள், விரைவு நடவடிக்கைக் குழுவின் (QRT) ரோந்து அதிகரிப்பு, முக்கிய இடங்களில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படைகளின் கூட்டுக் குழுக்கள், ராம்பன் மாவட்டத்தின் பனிஹால் பகுதி உட்பட விரிவான கண்காணிப்பு மற்றும் சோதனைகளை நடத்தி வருகின்றன.
CRPF, தேசிய நெடுஞ்சாலை-44-ல் சாலை திறப்புக் குழுக்களை (ROPs) நிறுத்தியுள்ளதுடன், யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு மருத்துவ உதவி வழங்க ராம்பனின் சந்தர்கோட்டில் 24×7 நடமாடும் சுகாதார முகாமையும் அமைத்துள்ளது.
57 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கியது. ரக்ஷா பந்தன் திருநாளான ஆகஸ்ட் 28-ம் தேதி யாத்திரை நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b