வியட்நாம் படகு விபத்தில் காணாமல் போன 6 ஆந்திர மீனவர்களின் குடும்பத்தினரை நாளை நேரில் சென்று சந்திக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி
விசாகப்பட்டினம், 13 ஜூலை (ஹி.ச.) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடலில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போன 6 மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை (ஜூலை 14) விசாகப்
A


விசாகப்பட்டினம், 13 ஜூலை (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடலில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போன 6 மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை (ஜூலை 14) விசாகப்பட்டினம் செல்கிறார்.

இதுகுறித்து விசாக மாவட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் கே.கே. ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஜெகன் மோகன் ரெட்டி நாளை காலை 10.30 மணிக்கு விசாகப்பட்டினம் விமான நிலையம் வந்தடைவார்.

பின்னர் அங்கிருந்து ஜப்பருபேட்டா பகுதிக்கு சென்று, கடல் விபத்தில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவார்.

மேலும், விபத்தில் இருந்து உயிர் தப்பிய மீனவர் கரி சின்னா மற்றும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து பேச உள்ளார் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஆந்திர அரசின் செயல்பாடுகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கரைக்கு அருகில் விபத்து ஏற்பட்டபோதும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், கடற்படை, கடலோர காவல்படை, கடல் போலீஸ், மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் 6 மீனவர்களை மீட்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

காணாமல் போன மீனவர்களின் நிலை தெரியவருவதற்கு முன்பே தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்-அமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

கடந்த ஜூலை 4-ந் தேதி கங்காவரம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் 7 மீனவர்களுடன் சென்ற மரப்படகு கவிழ்ந்தது.

இதில் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற 6 மீனவர்களை தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை 4 நாட்கள் ஈடுபட்டும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA