Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 13 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜா, மீன்பிடித் தொழிலுக்காக நேற்று அதிகாலை கடலுக்குச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் படகில் இருந்த ராஜா கடலுக்குள் மூழ்கி மாயமானார்.
கோவளம் கடற்கரைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலர் இந்த விபத்தை நேரில் கண்டுள்ளனர்.
ராஜாவின் படகு கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் சென்றபோது, திடீரென எழுந்த பேரலை ஒன்று படகை தாக்கியதில் அது தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
உடன் சென்ற மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு முயற்சியில் இறங்கினர். எனினும், கடல் அலையின் வேகமும் நீரோட்டமும் அதிகமாக இருந்ததால் ராஜாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தகவல் அறிந்ததும் கோவளம் மீனவ கிராம மக்கள் மற்றும் சக மீனவர்கள் ஒன்றிணைந்து கடலில் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 15-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் குழுக்களாகப் பிரிந்து, ராஜா காணாமல் போன பகுதியைச் சுற்றி தேடி வருகின்றனர்.
கடலோரக் காவல்படையினருக்கும், மீன்வளத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாயமான ராஜாவுக்கு 40 வயது ஆகிறது. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த ராஜா காணாமல் போன சம்பவம், கோவளம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உறவினர்கள் கடற்கரையில் கதறி அழுதவாறு காத்திருக்கின்றனர்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜாவை உயிருடன் மீட்க வேண்டும் என கிராம மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b