செங்கல்பட்டு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் ஆசிரியர்களை தாக்கி கட்டிப்போட்டு விட்டு 12 பேர் தப்பியோட்டம்..!
செங்கல்பட்டு 13 ஜூலை (ஹி.ச.) செங்கல்பட்டு அருகே ஆத்தூரில், சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 70-க்கும் மேற்பட்டோர் தங்க வைக
தாக்குதல்


செங்கல்பட்டு 13 ஜூலை (ஹி.ச.)

செங்கல்பட்டு அருகே ஆத்தூரில்,

சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 70-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பு இல்லத்திற்குள் பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வந்ததாகவும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த போது, 10-க்கும் மேற்பட்டோர் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு வார்டனை தாக்கி, அவர்களின் கை-கால்களை கட்டிப்போட்டுள்ளனர்.

பின்னர் அவர்களிடமிருந்த செல்போன்களை பறித்ததுடன், நுழைவுவாயிலில் இருந்த காவலாளியையும் தாக்கி, கேட் பூட்டை உடைத்து வெளியேறியுள்ளனர்.

வெளியேறியவர்கள் செங்கல்பட்டு–ஒரக்காட்டுப்பேட்டை சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை தாக்கி, இருசக்கர வாகனங்கள், செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், மொத்தம் 12 பேர் தப்பிச் சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் சென்னை, நாமக்கல், கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் வார்டன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தப்பியோடியவர்களை பிடிக்க செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு இல்லத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam