சென்னை விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீது பறவை மோதியது - சேவை ரத்து
சென்னை, 13 ஜூலை (ஹி.ச.) லண்டனில் இருந்து பிரிட்டிஷ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை,3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும், சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு, லண்டன் புறப்பட்டு செல்லும். அதைப்போல்
Chennai International Airport


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)

லண்டனில் இருந்து பிரிட்டிஷ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை,3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும், சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு, லண்டன் புறப்பட்டு செல்லும். அதைப்போல் இன்று லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், 224 பயணிகள், 12 விமான ஊழியர்கள், 236 பேருடன், சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.

அந்த விமானம் இன்று வழக்கமான நேரத்திற்கு முன்னதாக, அதிகாலை 3 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்க தயாரானது.

இந்த நிலையில் அந்த விமானம் படிப்படியாக, உயரத்தையும் வேகத்தையும் குறைத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, சுமார் 500 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென விமானத்தின் முன் பகுதியில் பறவை ஒன்று மோதி, விமானத்தின் இன்ஜின் பகுதிக்குள் சிக்கிக்கொண்டது.

இதை அடுத்து பரபரப்படைந்த விமானி, மிகுந்த சாமர்த்தியமாக, விமானத்தை பத்திரமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமாக, தரை இறங்கக்கூடிய இடத்தில், தரையிறக்கினார். விமானத்தில் இருந்த 236 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாமல், நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

இதை அடுத்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், பறவை மோதி விமானம் சேதம் அடைந்துள்ளதால், அந்த விமானத்தை உடனடியாக மீண்டும் இயக்க முடியாது. பராமரிப்பு பணிகள் செய்து முடித்த பின்பு தான், விமானத்தை இயக்க முடியும் என்று விமான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து, இன்று காலை5.35 மணிக்கு, லண்டனுக்கு சொல்ல இருந்த பிரிட்டிஷ் விமானம் ரத்து செய்யப்பட்டது.

அந்த விமானத்தில் பயணிக்க இருந்த 268 பயணிகளும், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் புறப்படும் நேரம் பின்னால் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் முழுமையான விசாரணைக்கு, உத்தரவிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், லண்டனில் இருந்து வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது விமானத்தில் பறவை மோதிய சம்பவத்தில், விமானத்தில் இருந்த 236 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN