அம்பத்தூரில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் 5 வயது சிறுமியின் உடல் 8 மாதங்களுக்கு பின் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
சென்னை, 13 ஜூலை (ஹி.ச.) சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு செல்லி அம்மன் நகரைச் சேர்ந்த ஷினு அலெக்ஸாண்டர் – ஜிஷா தம்பதியினரின் இளைய மகள் நெஸ்லின் ரியா (5), கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி காய்ச்சலால் அம்பத்தூரில் உள்ள தனியார் தேஜா மருத்துவமனையில் அனுமத
பிரேத பரிசோதனை


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)

சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு செல்லி அம்மன் நகரைச் சேர்ந்த ஷினு அலெக்ஸாண்டர் – ஜிஷா தம்பதியினரின் இளைய மகள் நெஸ்லின் ரியா (5), கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி காய்ச்சலால் அம்பத்தூரில் உள்ள தனியார் தேஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

குழந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், சிறுமியின் தாய் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், தகுதியான குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனை இன்றி மருத்துவர்கள் சரோஜினி மற்றும் ராஜா திக்விஜய் தேஜா ஆகியோர் மருத்துவ நெறிமுறைகளை மீறி அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் என குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பெற்றோர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம் மற்றும் மருத்துவ கவுன்சிலின் உத்தரவின் பேரில், திருவள்ளூர் அருகே மப்பேடு கிறிஸ்துவ இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சிறுமியின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையில், குழந்தையின் பெற்றோர், இழப்பீடு பெற்றுக் கொண்டதாக வெள்ளைத் தாளில் எழுதிக் கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியதாகவும், இனி வேறு எந்தக் குழந்தைக்கும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam