Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)
பக்ரீத் உள்ளிட்ட எந்த நாளிலும் தமிழகத்தில் பசு அல்லது கன்றுகளை வெட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு, கடந்த மே 27ஆம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. மேலும், தமிழ்நாட்டில் கால்நடைப் பாதுகாப்பு சட்டங்களை அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
பக்ரீத் பண்டிகையின்போது பொது இடங்களில் தற்காலிகக் கொட்டகைகள் அமைத்து பசுக்கள் சட்டவிரோதமாக வதைக்கப்படுவதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டு உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் மட்டுமே விலங்குகளை வதைக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுடன், எதிர்மனுதாரர் கே. சூர்யா பிரசாந்த், தமிழ்நாடு டிஜிபி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam