குட்கா வழக்கில் கைதான விசாரணை கைதி மரணம் - காவல்துறை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
நாகர்கோவில் , 13 ஜூலை (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்கா பொருட்கள் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிவர்மன், கடந்த சில நாட்களாக நாகர்கோவில் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரெ
குட்கா வழக்கில் கைதான விசாரணை கைதி மரணம் - காவல்துறை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு


நாகர்கோவில் , 13 ஜூலை (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்கா பொருட்கள் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிவர்மன், கடந்த சில நாட்களாக நாகர்கோவில் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவர் உயிரிழந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சபரிவர்மனின் மரணம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்ததாக சிறை நிர்வாகம் கூறுகிறது.

ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த சபரிவர்மனின் உறவினர்கள், காவல்துறையினர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். விசாரணையின்போது போலீசார் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சபரிவர்மனின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை கைதி மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b