Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)
சென்னை ஆர்.கே. நகர் 38-வது பகுதியில் திமுகவின் துணை வட்டச் செயலாளராக உள்ள ராஜா
தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இன்று காலை தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் பின்னால் இருந்து வந்த இரண்டு பேர் திடீரென ராஜாவை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கினர்.
உயிர் தப்பிக்க ராஜா ஓடியபோதும், அவரை துரத்திச் சென்று மீண்டும் தாக்கிவிட்டு, மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, அப்பகுதியினர் ராஜாவை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த ஆர்.கே. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ராஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், மேலும் தனிப்பட்ட உறவு தொடர்பான பிரச்சினையும் தாக்குதலுக்கான காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ராஜா மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P