அரியலூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு - காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்
அரியலூர், 13 ஜூலை (ஹி.ச.) அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லாததைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரி
Drinking water shortage near Ariyalur


அரியலூர், 13 ஜூலை (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லாததைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், கடந்த இரண்டு வாரங்களாகவே செந்துறை பகுதியில் குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்றும், இதனால் அன்றாடத் தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

மேலும், இரவு நேரங்களில் தெரு விளக்குகளும் எரிவதில்லை என்றும், இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோர் இரவில் நடமாட அச்சப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

குடிநீர் மற்றும் தெருவிளக்கு பிரச்சனை தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆதங்கப்பட்ட பெண்கள், இன்று காலை காலி குடங்களுடன் ஒன்றுதிரண்டு செந்துறை முக்கிய சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

திடீரென நடந்த இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கித் தவித்தன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக குடிநீர் வழங்கவும், தெருவிளக்குகளை சரிசெய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b