Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 13 ஜூலை (ஹி.ச.)
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர்–அணி கூட்டணிகளில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் அதன் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரின் 17 ஆண்டுகால பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியிருப்பதாக அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2008-ம் ஆண்டு தொடக்க ஐபிஎல் தொடரில் வீரராக சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற ஸ்டீபன் பிளெமிங், 2009-ம் ஆண்டு முதல் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் தனது அனுபவம் மற்றும் வியூகங்களால் சென்னை அணியை உலகின் மிகவும் வெற்றிகரமான டி20 பிராஞ்சைசிகளில் ஒன்றாக உயர்த்தினார்.
அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே அணி 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்றது.
மேலும் 12 முறை பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 10 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டியில் விளையாடிய அணிகளில் ஒன்றாக சாதனை படைத்தது.
பதவி விலகல் குறித்து ஸ்டீபன் பிளெமிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஎஸ்கேவுடன் இணைந்து பணியாற்றியது தனது பயிற்சியாளர் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமை என்றும், இந்த அணியுடனான பயணம் என்றும் மனதில் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிளெமிங்கின் இடத்தை நிரப்பப் போகும் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இருப்பினும், புதிய தலைமைப் பயிற்சியாளர் தொடர்பாக இதுவரை சிஎஸ்கே நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA