சபரிமலை கோவில் விவகாரத்தில் ஐகோர்ட்டு எல்லை மீறி தலையிடுகிறது - கேரள மந்திரி குற்றச்சாட்டு
திருவனந்தபுரம் , 13 ஜூலை (ஹி.ச.) சபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய தந்திரி நியமனம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டே இறுதி முடிவு எடுக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ள நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் வழிபாட்டு விவகாரங்களில் ஐகோர்ட்டு எல்லை
A


திருவனந்தபுரம் , 13 ஜூலை (ஹி.ச.)

சபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய தந்திரி நியமனம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டே இறுதி முடிவு எடுக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ள நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் வழிபாட்டு விவகாரங்களில் ஐகோர்ட்டு எல்லை மீறி தலையிடுவதாக கேரள தேவஸ்தான மந்திரி கே. முரளீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலின் தற்போதைய தந்திரி மகேஷ் மோகனரரின் பதவிக்காலம் ஆடி மாதத்துடன் நிறைவடைகிறது.

மரபுப்படி அவருக்குப் பிறகு கண்டரரு ராஜீவரர் தந்திரியாக பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், தங்கம் கொள்ளை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளதால், அவரை மீண்டும் தந்திரியாக நியமிப்பதில் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது.

இதையடுத்து, அவரது மகன் கண்டரரு பிரம்மதத்தனை தந்திரியாக நியமிக்கலாமா என்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, புதிய தந்திரி நியமனம் தொடர்பான முடிவை கேரள ஐகோர்ட்டே எடுக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தேவஸ்தான மந்திரி கே. முரளீதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதிய தந்திரி நியமனம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு முடிவு எடுக்க தேவஸ்தான வாரியக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தற்போது மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு கேரள ஐகோர்ட்டின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்டு வருவதால், மாநில அரசோ அல்லது திருவிதாங்கூர் தேவஸ்தானமோ இதில் தலையிட முடியாத நிலை உள்ளது.

சபரிமலை கோவில் விவகாரங்களில் ஐகோர்ட்டின் தலையீடு எல்லை மீறியதாக உள்ளது.

பூஜைக்கு பூ வாங்க வேண்டுமானாலும், எந்த பூ வாங்க வேண்டும் என்பதற்குக்கூட ஐகோர்ட்டின் அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கம் கொள்ளை வழக்கு பல தலைமுறைகள் கடந்தாலும் முடிவுக்கு வராது.

கோவில் நிர்வாகம் மற்றும் வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத அளவுக்கு நீதிமன்றக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA