மதுரை சாலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை ஆறாக உயர்வு
மதுரை, 13 ஜூலை (ஹி.ச) மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில், இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி கே.எம்.ஆர் டிரான்ஸ் (KMR Tranz) எனும் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தத
Madurai


மதுரை, 13 ஜூலை (ஹி.ச)

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில், இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி கே.எம்.ஆர் டிரான்ஸ் (KMR Tranz) எனும் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது.

கீழ் மற்றும் மேல்தள படுக்கை வசதி கொண்ட இந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பைக் கடந்து எதிர் திசையில் வாகனங்கள் செல்லும் சாலையில் நுழைந்துள்ளது.

அப்போது, திருச்சிராப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது, தனியார் ஆம்னி பேருந்து வேகமாக மோதி, பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில், தனியார் ஆம்னி பேருந்து மீண்டும் இடது புறம் வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடையில் பயங்கரமாக மோதியுள்ளது.

ஆனால், பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த 41 பேர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் சிலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், அவர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக மாநகர காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அபினவ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வஞ்சிநகரத்தை சேர்ந்த பெருமாள் s/o சின்னையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN