Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில்,
மதுரை மேலூர் கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அவசர நிவாரண உதவிகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது தொடர்பாக மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சருடன் பேசி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்பட வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ