Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 13 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேஷன் தெருவைச் சேர்ந்தவர் பேச்சி லெட்சுமி (60). இவர் தனது வீட்டிற்கு வந்த வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மொபைல் கடையின் விற்பனை பிரதிநிதியான வேல் மாரிமுத்து என்பவரின் விளம்பரத்தை நம்பி கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி ஓப்போ எப்29 ப்ரோ 5ஜி என்ற செல்போனை ரூ.29 ஆயிரத்து 500 செலுத்தி வாங்கினார்.
விற்பனை பிரதிநிதி இந்த செல்போன் தண்ணீரில் விழுந்தாலும் பழுதாகாது என தண்ணீரில் மூழ்க வைத்து காண்பித்து உத்தரவாதம் அளித்தார்.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே 26ம் தேதி எதிர்பாராத விதமாக செல்போன் மீது தண்ணீர் பட்டதில் அது முற்றிலும் இயங்காமல் பழுதானது.
இதையடுத்து பேச்சி லெட்சுமியின் மகன் சக்திவேல் அந்த செல்போனை வாங்கிய கடையிலும், பாளையங்கோட்டையில் உள்ள ஓப்போ சர்வீஸ் மையத்திலும் சரி செய்ய கொடுத்தார்.
அங்கு செல்போனை சரி செய்ய ரூ.5 ஆயிரம் முன்பணம் கேட்டதோடு, சர்வீஸ் கட்டணமாக ரூ.500 வசூலித்தனர்.
மேலும் கடை ஊழியர்கள் பேச்சி லெட்சுமியை தரக்குறைவாக பேசி அலைக்கழித்தனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் எம்.பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் பி.சண்முகப்பிரியா ஆகியோர் செல்போன் கடை மற்றும் சர்வீஸ் மையம் இணைந்து சேவை குறைபாட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.
இதன் அடிப்படையில், செல்போன் வாங்கிய தொகையான ரூ.29 ஆயிரத்து 500ஐ 9 சதவீத வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதமும், சர்வீஸ் கட்டணமாக வசூலித்த ரூ.500ஐ திருப்பித் தரவும் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த தொகையை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN